அஜ்மான் தமிழ்ச்சங்கம்

                                             


   திரு.அஜ்மான்மூர்த்தி அவர்கள், 1998 ஆம் ஆண்டு தமது சமூக சேவை எண்ணத்தால் , "சார்ஜா தமிழர் பண்பாட்டுக்கழகம்" என்ற சேவை அமைப்பில் புரவலராகத்தம்மை இணைத்துக்கொண்டார்.


அவ்வமயத்தில், அமீரகத்திற்கு எம்பிளாய்மென்ட் விசாவில் வந்து , பணி தராமல் புறக்கணித்து ஏமாற்றப்பட்ட பல தமிழர்கள் , இவரிடம் வந்து தங்கள் துயரம் சொல்லி முறையிட, அவர்கள் மனத்துயர் போக்கும்வண்ணம் ஒரு கட்டுமானத்தொழில் நிறுவனம் அமைத்து , அவர்களையும், அவர்களை நம்பியிருந்த அவர்கள் குடும்பத்தாருக்கும் , அரிய உதவிகள் புரிந்தார்.


மேலும், தாய்நாட்டிற்கும் தன்னாலான உதவிகள் செய்து வந்தார். 2001 குஜராத் பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற தேசியப்பேரிடர் காலங்களில் , தமது சொந்த நிதி , அமீரகத்தொழிலதிபர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அன்பர்கள் மூலம் பெருமளவு நிதி திரட்டி , தாய்நாட்டுத்துயர் துடைக்க தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து மன அமைதி கொண்டார்.


இக்கால கட்டங்களில் ,திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்கள் வணிகம் நடத்தி , வசித்து வந்த அஜ்மான் பகுதி தமிழர்கள் , அஜ்மான் பகுதியில் தமிழர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி , அஜ்மான் பகுதி தமிழ் உழைப்பாளர்களுக்கும் தேவைப்படும் சேவை செய்து உதவி செய்ய வேண்டிக்கொள்ள, அவர்கள் விரும்பியவண்ணமே, 2003 ஆம் ஆண்டு "அமீரகத்தமிழர் அமைப்பு" எனும் சமூக சேவை அமைப்பினை , அஜ்மானில் தோற்றுவித்தார்.


இவ்வமைப்பின் மூலம் , வருடந்தோறும் தாயகத்தமிழ்க்கலைஞர்களை வரவழைத்து "தமிழர் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை" நடத்தி வெகுமதியும், நலிவடைந்த கலைஞர்களுக்கு பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகிறார்.

மேலும் வருடந்தோறும் நடைபெறும் "முப்பெரும் விழா!" மூலம் அமீரகத்தமிழர் அனைவரும் சங்கமிக்கும் குடும்பத்திருவிழாவாக நடத்தி , அறுசுவை உணவும் , வேலையின்றி துயருறும் அமீரகத்தமிழர்களை அழைத்து , வாடிய அவர்கள் தன்னம்பிக்கை கொள்ளும் வண்ணம் அவர்தம் நலன்சார்ந்த பொருளாதார உதவிகளும் , சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்.


மேலும் , சரியான கட்டடம் இன்றி இயங்கும் தமிழகப் பள்ளிகளுக்கு , நிதியுதவிகள் அளித்து உதவுதல், நடுநிலைப்பள்ளிகளை , மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல் , ஏழை மாணவர்களின் படிப்பு உதவித்தொகை போன்ற வருங்கால சமுதாயத்தினரின் கல்விச்சேவையில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டு செய்து வருகிறார்.


மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, கும்பகோணம் பகுதியில் ஒரு பள்ளிவாசல் கட்டுமானப் பணியும் , கும்பகோணம் பகுதிகளில் சில கோவில்களுக்கு கும்பாபிஷேக திருப்பணிகளும் செய்து உள்ளார்.


அமீரகத்திற்கு வருகை தரும் தமிழகத்தொழிலதிபர்கள், சமூக மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு சிறப்பு அறிமுகக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்து , தமிழரின் விருந்தோம்பலை கடல் தாண்டி , அமீரகத்திலும் அவர்களுக்கு அளித்து பேருவகை கொள்ளும் பெருந்தகையாளர்.

 மேலும் அத்தகைய பிரமுகர்கள் மூலம் , வெகு நீண்ட நாட்களாக அரசாங்க காரியங்கள் , அரசு அனுமதி மற்றும் அரசு உதவிகள் தேவைப்படும் அமீரகத்தமிழர் நிலையை எடுத்துச்சொல்லி , இங்கிருந்தே அமீரகத்தமிழர்களின் குடும்பத்துயர் நீக்கும் வாய்ப்பாக , அந்நிகழ்வை மாற்றி, வெற்றி காணும் மாமனிதர். இவ்வாறு உதவிகள் தேவைப்படும் அமீரகத்தமிழர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாகவே, இவ்விழாக்களை நடத்திவரும் , திரு.அஜ்மான் மூர்த்தி அவர்கள் , என்றும் தனது தனிப்பட்ட தேவைகளை , வருகை தரும் விருந்தினர்களிடம் ஒருபோதும் கேட்டதில்லை, என்பது அமீரகத்தமிழர்களும் வருகை தரும் தமிழக அன்பர்களும் , திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களிடம் வியந்து போற்றும் ஓர்  நற்குணம்.


திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களைத்தேடி வந்த விருதுகள்!


2007 ஆம் ஆண்டு அன்பு பாலம் அமைப்பு வழங்கிய, 

" சிறந்த சமூக சேவகர்" விருது.

2006-2007 ஆம் ஆண்டு உலக அமைதி மற்றும் நட்புறவு 

அமைப்பு வழங்கிய, " இராஜீவ் காந்தி விருது " .

2008 ஆம் ஆண்டு துபாய் சங்கமம் டிவி 
அமைப்பு வழங்கிய , "சிறந்த அமீரகத்தொழிலதிபர் விருது".

2008 ஆம் ஆண்டு அமெரிக்க காஸ்மாஸ் 
பல்கலைக்கழகம் வழங்கிய, சிறந்த சமூக 
சேவைக்கான " கவுரவ "டாக்டர்" பட்டம்.

2010 ஆம் ஆண்டு இந்தியக்குடியரசு விழா தினத்தன்று, அன்பு பாலம் அமைப்பு வழங்கிய, திருமணமாகி 30 ஆண்டுகள் கடந்து,  மனமொத்த ஆதர்ச தம்பதியராய் வாழ்ந்து வரும்  திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களையும், அவரின் மனிதாபிமான சமூகப்பணிக்கு உறுதுணையாக விளங்கிவரும் திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களின் அன்புத்துணைவியார் திருமதி.சாந்தி அம்மையாரையும் , அமீரகத்தமிழர்கள் சார்பில் வாழ்த்திப் பாராட்டும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் முன்னைலையில் , நீதியரசர்.திரு.ஜோதிமணி அவர்கள் வழங்கிய "இலட்சியத்தம்பதிகள்" எனும் விருது.

              திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களின் விருதுகள் பட்டியலில் மயிலிறகாக , அமீரகத்தில் திரு.அஜ்மான்மூர்த்தி அவர்களின்  செயற்கரிய செயல்களையும் தமிழ்ச்சேவையையும், வேலையிழந்து தவிக்கும் அமீரகத் தமிழர்களுக்கு தானாக முன்வந்து , அவர்தம் இன்னல் களைய உதவும் திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களின் மனிதாபிமான சேவைத்திறனையும் பாராட்டி கவுரவிக்கும் விதமாக, 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், கவிதாயினி.கனிமொழி அவர்கள், திருமதி.அஜ்மான் மூர்த்தி அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

            இப்படி எண்ணிறந்த விருதுகளும் , பாராட்டுகளும் திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களின் சமூக சேவையைப்பாராட்டி கிடைக்கப்பெற்றாலும்,   அவற்றையெல்லாம் தன்னடக்கத்துடன், அமீரகத்தில் கடல்கடந்து வாழும்     தமிழர்களுக்கே சமர்ப்பித்து,  தனிப்பட்ட குடும்ப மற்றும் வணிக வாழ்வியல் கடமைகள் மற்றும் சூழல்கள், தமது பொதுவாழ்வுக்கு எந்த வித இடையூறுமின்றி  பார்த்துக்கொண்டு,  அர்ப்பணிப்பு உணர்வுடன், தாம் மேற்கொண்ட இலட்சியப்   பாதையில் , சிறிதும் தொய்வின்றி , நாடிவரும் தமிழர்க்கெல்லாம் , 1984 போல,  இன்றும் நலமே செய்துவருகிறார்.

                                         


முனைவர்.திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களின் 
மனிதநேய நற்பணி
 இன்று போல என்றும் தொடர, 
அமீரகத்தமிழர்க்கெல்லாம்,
காப்பரணாய் என்றும்  விளங்க,
 எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்!





"  செய்வன திருந்தச்செய்!  " 

                                                                                       -     முனைவர்.அஜ்மான் மூர்த்தி.